தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை செய்தனர்.
இன்று (செப்.15) காலை, சென்னை அண்ணா சாலை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைகளுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக அமைச்சர்களும் உடனிருந்தனர். அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டவை பின்வருமாறு:
`75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!’ என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம், அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தேமுதிகவைச் சேர்ந்த விஜய பிரபாகரன், அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விசிக மூத்த தலைவரும், எம்.பி.யுமான து. ரவிக்குமார் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில்:
`மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று கோடி மக்களிடையே நற்பண்புகளை வளர்ப்பதற்கும் மதுவிலக்குத் தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என அண்ணா உறுதிபடத் தெரிவித்தார்’ என்று பதிவிட்டுள்ளார்.