
மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லையெனில், திமுக ஆதரவு நிலைப்பாடு 2026-ல் மாறலாம் என இயக்குநர் பா. இரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இசைக் கலைஞர் தெருக்குரல் அறிவு உருவாக்கிய ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித் பங்கேற்றார். இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்புடைய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
"ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சட்டரீதியாக சரியாக விசாரித்து, சரியான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சரியான குற்றவாளிகள் எதன் பின்னணியில் இந்தக் குற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை தீவிர விசாரணை மேற்கொண்டு, இதை தர்க்கப்பூர்வமாக சரியாக நிரூபித்து, இதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்காக ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனை கிடைத்தாலே பெரிய விஷயம்.
காவல் துறையின் விசாரணையில் உண்மைக் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்கள். விசாரணை பல கட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து இந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான விஷயம்தான்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசிடம் முன்வைத்த கேள்விகளைத் தொடர்ந்து, அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நான் உணர்கிறேன். நான் ஏற்கெனவே நேரடி அரசியல்தான் செய்து வருகிறேன். ஆனால், பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராகும் விருப்பம் இல்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதை ஆக்கப்பூர்வமானதாகப் பார்க்கவில்லை. சரியான குற்றவாளிகளை, எதன் அடிப்படையில் குற்றத்தைச் செய்திருக்கிறார்கள் என்பதை சரியாக விசாரித்து நீதிமன்றத்தின் முன் வாதம் வைத்து குற்றத்தை நிரூபிப்பதுதான் சரியான வழிமுறை. நான் எப்போதும் என்கவுன்ட்டருக்கு எதிரானவன்.
அதிமுக ஆட்சியில் தலித்துகள் பிரச்னை தீர்ந்தபாடில்லை. அந்தப் பிரச்னைகளின்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அவர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். அதே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், தலித்துகள் பிரச்னை இரண்டாம் தரமாகப் பார்க்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்வதில் எங்களுக்கு மிகப் பெரிய விமர்சனம் இருக்கிறது. அந்த விமர்சனத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவோம்" என்றார் பா. இரஞ்சித்.
தொடர்ந்து, 2026-ல் அரசியல் நிலைப்பாடு மாறுமா, தொடருமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், "பிரச்னைகளின் அடிப்படையில் சில கேள்விகளைக் கேட்கிறோம். ஆனால், பிரச்னைகளைத் தீர்த்துவைக்காத, தீர்த்துவைக்க முயற்சிக்காத, தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயபோது, நிச்சயமாக அதற்கான முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கும். இது ஓர் எச்சரிக்கைதான்.
ஆம், நான் திமுகவுக்குதான் வாக்களித்தேன். மாற்றம் வேண்டும், மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என வாக்களித்தேன். ஆனால், இது தொடர்ந்துகொண்டிருப்பதை பெரிய பிரச்னையாக இருப்பதாகப் பார்க்கிறேன்" என்றார் பா. இரஞ்சித்.