வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் நேற்று பதவியேற்றுக்கொண்டார்கள். அமைச்சரவை மாற்றத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி வாரிசு அரசியல் குறித்து விமர்சனம் வைத்தார்.
"திமுகவுக்கு பலர் உழைத்திருக்கிறார்கள். பலமுறை சிறைக்குச் சென்று சித்ரவதையை அனுபவித்தவர்களெல்லாம் உள்ளார்கள். மிசாவில் கைதானவர்கள் இருக்கிறார்கள். மூத்த நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை.
ஆனால், கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்குதான் முதல்வர் என்ற மிகப் பெரிய பதவி கிடைக்கும் என்ற சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தார். இவருக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வர் ஆனார். இவரைத் தொடர்ந்து, உதயநிதி துணை முதல்வர் ஆகியுள்ளார். ஸ்டாலின் தலைமையில் உள்ள அமைச்சர்கள், உதயநிதியின் மகன் இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அடிமையாக இருக்கக் கூடிய காட்சிதான் திமுகவில் உள்ளது.
பாஜகவில் அண்ணாமலை வந்திருக்கிறார் என்றால், அவர் யாருடைய அரசியல் வாரிசும் கிடையாது. ஆனால், ஸ்டாலின் யார்? கருணாநிதியின் மகன். உதயநிதி யார்? கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன். இது வாரிசு அரசியல். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். மன்னர் பரம்பரைபோல ஆகிவிட்டது. ஆட்சி அதிகாரம் ஒரு குடும்பத்தில் சிக்கி தமிழகம் சிரழிய மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.
உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என இரண்டுமே எங்கள் பகுதியில் உள்ள அதிமுகவுக்கு அனைத்து அங்கீகாரங்களையும் வழங்கியுள்ளன. ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் கட்சியிலேயே கிடையாது. எங்களுடையத் தரப்புதான் அதிமுக. அதிமுக பிரிந்துபோனதாக இனி பேசவே வேண்டாம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைவிட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூடுதலாக ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கூட்டணி பலம் குறைவாக இருந்த நேரத்திலும், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி அதிமுக.
எங்கள் தரப்பில் இருப்பது தான் அதிமுக. அனைத்தும் அதிகாரங்களையும் பெற்று ஒரு தேர்தலையும் எதிர்கொண்டுவிட்டோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.