கோப்புப்படம்
கோப்புப்படம்

மைக்ரோசாஃப்ட் சிக்கல்: சென்னை விமான நிலையத்தில் புலம்பும் பயணிகள்!

"அமெரிக்கா செல்ல நாக்பூரிலிருந்து இணைப்பு விமானம் உள்ளது. மாலை 6 மணி வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், என்னுடைய இணைப்பு விமானத்தின் நிலை குறித்து எனக்குத் தெரியவில்லை."
Published on

மைக்ரோசாஃப்ட் முடங்கியுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிறைய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் செய்வதறியாது புலம்பி வருகிறார்கள்.

உலகளவில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயனர்கள் 'Blue Screen of Death' எனும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக உலகம் முழுக்க தகவல் தொழில்நுட்ப சேவை, பொருளாதாரம், தொலைத்தொடர்பு, பொதுச் சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அகாசா ஏர்லைன்ஸ் என இந்திய ஏர்லைன் நிறுவன விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தகவல் தொடர்பு மையத்தில் ஏராளமானோர் திரண்டிருப்பதால், 24 மணி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களாக இருந்தால் மட்டுமே தங்களைத் தொடர்புகொள்ளவும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சென்னை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மகேஷ் பெல்லூர் எனும் பயணி கூறுகையில், "முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. உலகளவில் மைக்ரோசாஃப்ட் சிக்கல் ஏற்பட்டுள்ளது பற்றி தெரியும். நான் இங்கே வந்த பிறகுதான் விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து தெரியும். எனக்கு வேறு வழியில்லை. அடுத்த அறிவிப்புக்காக மாலை 5 மணி வரை காத்திருக்குமாறு தெரிவித்துள்ளார்கள். நான் பெங்களூரு செல்கிறேன். இந்தப் பிரச்னைக்கு முழுவதுமாக இவர்களை மட்டும் நான் குறைகூற மாட்டோம்" என்றார்.

மற்றொரு பயணி கூறுகையில், "எனக்கு 5.10 மணிக்கு விமானம். விமானம் ரத்து செய்யப்பட்டதாக எந்தச் செய்தியும் எனக்கு அனுப்பப்படவில்லை. மதியத்திலிருந்து நாங்கள் இங்கே இருக்கிறோம். அமெரிக்கா செல்ல நாக்பூரிலிருந்து இணைப்பு விமானம் உள்ளது. மாலை 6 மணி வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், என்னுடைய இணைப்பு விமானத்தின் நிலை குறித்து எனக்குத் தெரியவில்லை. அமெரிக்க விமானத்தை நான் தவற நேரிடும் என்றுதான் நினைக்கிறேன். மென்பொருள் கோளாறு என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். மேலாளரிடம் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. வழிகாட்டுமுறை எதுவும் வெளியிடப்படவில்லை" என்றார்.

தேவ் மோஹன்டி என்பவர் கூறுகையில், "கோவா செல்லவிருந்த என்னுடைய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ குறுஞ்செய்தியோ, மின்னஞ்சலோ அனுப்பவில்லை. விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. இங்கு வந்தபிறகுதான் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். இண்டிகோ நிறுவனம் இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in