
ஹெச்எம்பி வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அது குறித்து மக்கள் பதற்றப்படவேண்டாம் என பேட்டியளித்துள்ளார் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஹெச்எம்பி (HMPV) வைரஸ் எனப்படும் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து நேற்று (ஜன.6) இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு ஹெச்எம்பி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் சென்னையிலும், சேலத்திலும் ஹெச்எம்பி வைரஸ் தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதன்பிறகு ஹெச்எம்பி வைரஸ் தொற்று சாதாரணமானது எனவும், உரிய சிகிச்சை பெற்றால் குணமடைந்துவிடலாம் எனவும், செய்தி வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று (ஜன.7) செய்தியாளர்களைச் சந்தித்துத் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியவை பின்வருமாறு,
` ஹெச்எம்பி வைரஸ் பற்றிய செய்தி வெளிவர ஆரம்பித்த உடனேயே நாம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் எந்த ஒரு அறிவுறுத்தலும் வெளியாகவில்லை. அதேபோல மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் சார்பில் நேற்று (ஜன.6) மாலை காணொளி வாயிலாக மாநில அரசுகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது குறித்துப் பதற்றப்படவேண்டிய அவசியம் இல்லை. பதற்றப்படுவதற்கான சூழலும் இல்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய வைரஸ். 2001-ல் முதல்முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5-6 நாட்களுக்கு சளி, இருமல் போன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், ஏற்கனவே பல்வேறு நோயால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது அவசியம்’ என்றார்.