இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சென்னை மக்கள்: மேயர் ப்ரியா

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சென்னை மக்கள்: மேயர் ப்ரியா

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 20 செ.மீ. மழை பதிவாகி இருந்தாலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை.
Published on

சென்னையில் நேற்று (அக்.15) பெய்த கனமழையை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் பணிகள் உதவியதாகவும், அதனால் ஒரே இரவில் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் பேட்டி அளித்துள்ளார் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன்.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், புதிய தலைமுறைக்கு மேயர் ப்ரியா ராஜன் அளித்த பேட்டி பின்வருமாறு:

`சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்திருக்கிறது. இரவு முழுவதும் பணியாளர்கள் களத்தில் இருந்தனர். 20 செ.மீ. மழை பதிவாகி இருந்தாலும் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. பல முக்கிய சாலைகளில் மக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.

பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் நன்றாக உதவியிருக்கிறது. ஒரு இரவுக்குள் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதற்கும் அதுவே காரணம். உணவுத் தேவை ஏற்பட்ட சில பகுதிகளில் மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை முழுவதுமே சாலைகளில் முதலில் தண்ணீர் தேங்கி, அதன்பின்னரே வெளியேறுகிறது. மழையால் குவிந்துள்ள குப்பைகள், கற்கள் போன்றவற்றை அகற்றும் பணிகளில் காலை முதலே தூய்மைப் பணியாளார்கள் துரிதமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண்ணில் நேற்று மட்டும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. புகார் அளித்தவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டதும், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அழைத்து உங்களின் புகாரில் குறிப்பிட்டுள்ள குறைகள் தீர்க்கப்பட்டுவிட்டதா என்று நேரடியாகக் கேட்டு ஆய்வு மேற்கொள்கிறோம்‘ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in