அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ. 908 கோடி அபராதமாக விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளதாவது:
"தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், இவருடையக் குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ரூ. 89.19 கோடி மதிப்புடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் பிரிவு 16-ன் கீழ் ஜெகத்ரட்சகன், இவருடையக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனம் மீது அமலாக்கத் துறை டிசம்பர் 1, 2021-ல் புகாரளித்தது.
சிங்கப்பூரிலுள்ள ஷெல் நிறுவனம் ஒன்றில் 2017-ல் ரூ. 42 கோடி முதலீடு செய்ததில் அந்நியச் செலாவணி சட்ட விதிகளை மீறியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிங்கப்பூர் பங்குகளைக் கைப்பற்றி குடும்ப உறுப்பினர்கள் இடையே பகிர்ந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இலங்கை நிறுவனத்தில் ரூ. 9 கோடி முதலீடு செய்தது தொடர்பாகவும் புகார் உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.