சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்குப் பிறகு பறக்கும் ரயில் சேவை இன்று (அக்.29) தொடங்கியுள்ளது. ஆனால் பறக்கும் ரயில்கள், பூங்கா ரயில் நிலையத்தில் நிற்காததால் பயணிகளின் அவதி தொடர்கிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு வசதியாக 4-வது பாதை அமைக்க கடந்த வருடம் முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கின. இதை அடுத்து சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அரக்கோணம், திருவள்ளுர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஏறத்தாழ 14 மாதங்கள் கடந்தும் 4-வது பாதை அமைக்கும் பணி நிறைவுபெறவில்லை.
இந்நிலையில் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. முதற்கட்டமாக நாளொன்றுக்கு இரு மார்க்கத்திலும் 90 ரயில் சேவைகள் வழங்கப்படவுள்ளன. மீதமிருக்கும் 4-வது பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கமான முறையில் 120 ரயில் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமம் தொடர்கிறது.
மேலும், சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிபேட்டை வரை பறக்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டபோது, பயணிகளுக்கு பயன்படும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை 32C மாநகரப் பேருந்து இயக்கப்பட்டது வந்தது. மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கியதால், 32C மாநகரப் பேருந்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தற்போது பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில்களும் நிறுத்தப்படாததால், மீண்டும் ரயில் சேவை தொடங்கியும் பயணிகளின் சிரமம் மேலும் அதிகரித்துள்ளது.