அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் கருத்து தெரிவிக்கவேண்டாம்: நயினார் நாகேந்திரன்

முன்னதாக கட்சியின் நிலைப்பாடு குறித்து தலைமையின் அனுமதி பெறாமல் கருத்து தெரிவிக்கவேண்டாம் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியிருந்தது.
அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் கருத்து தெரிவிக்கவேண்டாம்: நயினார் நாகேந்திரன்
1 min read

அதிமுகவுடனான கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

அதிமுக, பாஜக கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஏப்.11-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டில் இன்று (ஏப்.18) நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,

`தேர்தல் கூட்டணியைப் பற்றி நாம் யாரும் பேசவேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள். முகநூல், எக்ஸ் போன்றவற்றில் அது எப்படி, இது எப்படி என்று கூட்டணி குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சியினர் யாரும் கருத்து தெரிவிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு சனாதனத்திற்கும், ஆன்மீகத்திற்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்த ஆட்சி தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் நம்முடைய குறிக்கோளாகவும், லட்சியமாகவும் இருக்கவேண்டுமே தவிர, வேறு எந்த சிந்தனையிலும் நாம் ஈடுபடக்கூடாது. எனவே அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டாம்’ என்றார்.

முன்னதாக கட்சியின் நிலைப்பாடு குறித்து தலைமையின் அனுமதி பெறாமல் கருத்து தெரிவிக்கவேண்டாம் என்று அதிமுக தலைமைக் கழகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில்,

`கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

ஆகவே, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in