ஆளுநரைப் புகழ்ந்து பேசினேனா?: உள்குத்தைக் கவனிக்குமாறு பார்த்திபன் விளக்கம்

"தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்!"
ஆளுநரைப் புகழ்ந்து பேசினேனா?: உள்குத்தைக் கவனிக்குமாறு பார்த்திபன் விளக்கம்
2 min read

ஆளுநர் ஆர்.என். ரவியைப் புகழ்ந்து பேசியது பேசுபொருளான நிலையில், அதிலுள்ள உள்குத்தைக் கவனிக்குமாறு பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.

உலக காசநோய் நாள் (மார்ச் 25) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

"இந்த நிகழ்ச்சி எவ்வளவு மேன்மையானது என்பதும், அது யாரால் நடத்தப்படுகிறது என்பதும் மிகவும் அவசியமான விஷயங்கள். இந்த விழா அரங்கில் நுழைந்தது முதல், தமிழ் மணக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை இவ்வளவு அழகாகப் பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு எனது மரியாதையை தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் தமிழில் பேசுவது ஆளுநருக்குப் புரியுமா என்று விசாரித்தேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகவும், அவருக்கு தமிழ் புரியும் என்றும் திருஞானசம்பந்தம் கூறினார். அதனால்தான் தமிழ் புத்தகங்களை அவருக்குப் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதனின் ஐந்து நிமிடப் பேச்சை வைத்து அவனை எடைபோடும் அளவுக்கு அவருக்குத் தமிழ் புரிகிறது" என்று பார்த்திபன் பேசியிருந்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவியைப் புகழும் வகையில் பார்த்திபன் பேசியிருந்தது பேசுபொருளானது.

இந்நிலையில் தனது பேச்சு குறித்தும் தனது பேச்சில் உள்ள உள்குத்து குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"நேற்றைய ஆளுநர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.

உ வே சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக “தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்” என்று துவங்கி “தமிழக ஆளுநருக்கு மரியாதை” எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன்.

“பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல” என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்! அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை “இது ஒரு வகையான positive politics (நேர்மறையான அரசியல்)" என்றார்.

பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this (இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும்) எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்!

தொடர்ந்து எங்ப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா”கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு” கேப்பாரு என்று கேட்பாரற்று பேச காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர் கொல்லி என்றேன். பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான். என்பதாக கூறி “கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார் எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன்.

தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி” எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய்

1 - தமிழ்

2 - தமிழ்

3 - தமிழ்

என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன்.

வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு:

பத்ம விருதோ கட்டு கட்டாக காந்திகளோ- ஏன்? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக, நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன்! ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ’தமாய் பாடக்கூடாது" என்று பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in