
மதுரை பாலமேட்டில் இன்று (ஜன.15) காலை கோலாகலமாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. இதில், 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற நத்தம் பார்த்திபனுக்குக் கார் பரிசளிக்கப்பட்டது.
பொங்கல் திருநாளை ஒட்டி, மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். நேற்று (ஜன.14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (ஜன.15) காலை 7.30 மணி அளவில் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி 10 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் மொத்தம் 930 காளைகள் களம் கண்டன.
இந்த ஜல்லிக்கட்டைக் காண மதுரை மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் பாலமேட்டிற்கு வருகை தந்தனர். பார்வையாளர்கள் பகுதியிலிருந்த ஒரு சிலர் `அரிட்டாபட்டியைப் பாதுகாப்போம்’ என மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக பதாகைகளை வைத்திருந்தது கவனம் ஈர்த்தது.
இதில், 14 காளைகளை அடக்கி முதல் இடத்தைப் பெற்றார் நத்தம் பார்த்திபன். 12 காளைகளை அடக்கி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி இரண்டாம் இடத்தையும், 11 காளைகளை அடக்கி பொதும்பு பார்த்திபன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். முதலிடம் பெற்ற நத்தம் பார்த்திபனுக்குக் கார் பரிசளிக்கப்பட்டது.