வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?: தமிழக அரசுக்கு பா. இரஞ்சித் கேள்வி

திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் வஞ்சக செயலை செய்து இருக்கிறது
வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?: தமிழக அரசுக்கு பா. இரஞ்சித் கேள்வி
PRINT-131

பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் 5-ல் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அவரது பெரம்பூர் இல்லத்துக்கு வெளியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் வைக்கப்பட்டது. ஜூன் 8 அதிகாலையில் அவரது உடல் செங்குன்றத்தை அடுத்த பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பா. இரஞ்சித், அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மரணத்தை முன்வைத்து திமுக அரசுக்கும், சமூக ஊடகங்களில் ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து கருத்துகள் தெரிவித்தவர்களுக்கும் தன் எக்ஸ் பதிவில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் இரஞ்சித். அவரது பதிவின் சுருக்கம்:

1. செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகில் படுகொலை நடந்திருக்கிறது. இனி இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருக்க என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறை அறிவித்துள்ளது. இதை ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா?

3. தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது? இதற்கு தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு.

5. திமுக ஆட்சியில் அமர முக்கிய காரணமாக அமைந்தது தலித் மக்களின் வாக்குகள். உங்கள் ஆட்சிக்கு ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கை செலுத்தினேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

6. அண்ணனின் படுகொலையை சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும், ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலையின் நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்?

7. எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை

திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர் (ஆம்ஸ்ட்ராங்). அம்பேத்கரின் அரசியல் பாதையில் சமரசமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழந்தது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவு. இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை) வழிநடத்தும். ஜெய்பீம்!

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in