ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படம்: முதல்வர் ஸ்டாலின் | MK Stalin | Thanthai Periyar

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி எழுதியிருந்தாலும், அவரது சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது என்பதால் அனைவருக்கும் பொதுவானது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படம்: முதல்வர் ஸ்டாலின் | MK Stalin | Thanthai Periyar
1 min read

இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்துவைக்கவுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ இல்லத் திருமண விழா சென்னை நீலாங்கரையில் இன்று (ஆக. 29) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

`நாளைய தினம் நான் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் மேற்கொள்கிறேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் ரூ. 10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டை நாம் ஈர்த்திருக்கிறோம்.

நம்முடைய தமிழ் சமுதாயம் சுயமரியாதையோடு, தலை நிமிர்ந்து நடைபோடுவதற்குக் காரணம் தந்தை பெரியார். அதனால்தான் தந்தை பெரியாரை பற்றி பாவேந்தர் பாரதிதாசன் புகழ்ந்து எழுதியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் திருவுருவப் படம் திறக்கப்பட இருக்கிறது. அதை நான் திறந்து வைக்கவுள்ளேன். இதை எண்ணிப் பார்க்கும்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டிருக்கிறேன்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி எழுதியிருந்தாலும், அவரது சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது என்பதால் அனைவருக்கும் பொதுவானது. அவர் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, ஏற்றத்தாழ்வு, தன்னம்பிக்கை, அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது.

இதை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அறிவு மேதை உலகளவில் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்குப் பெருமை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in