
தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3.60 லட்சத்திற்கு மேற்பட்டோர் தமிழ்நாட்டில் தெரு நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தெருநாய்க் கடி சம்பவங்களும் ரேபிஸ் நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதனடிப்படையில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் கூடங்கள் அமைக்கும் பணி நாடு முழுவதிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்த ஆண்டில் மட்டும் 3.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தெருநாய்க்கடிகளைத் தடுப்பதற்கும், நாய் இனப்பெருக்கத்தை குறைக்கவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. நாய் கடித்த இடத்தை உடனே சோப்பு, சுத்தமான நீர், கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும், நாய் கடித்த காயத்தில் மிளகாய், கடுகு எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது; நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையில் இன்று (செப். 15) செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”இன்று 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தற்போது புதிதாக தொடங்கப்பட்ட 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கான ASV மற்றும் ARV மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தெருநாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, நாய்க்கடி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
Health Ministry | DPH | Rabies | Rabies Awareness | Stray Dog Issue |