விடுதலைச்சிறுத்தைகள் ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவதுதான் எமது இலக்கு என மத்திய அமைச்சர் எல். முருகனின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.
விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து இன்று (அக்.20) காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருந்தார் மத்திய இணையமைச்சர் எல். முருகன். அவர் பேசியவை:
`அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் திருமாவளவன் எவ்வாறு தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்? அவருக்கு சமூகநீதி பற்றி பேச அருகதை கிடையாது. இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகவைக்கும் செயலை அவர் செய்கிறார். திருமாவளவன் முதலமைச்சர் ஆவதற்கான கனவெல்லாம் நடக்காது’ என்றார்.
எல். முருகனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`கடந்த 2009-ல் முதல்வர் கலைஞர் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை கொண்டு வந்தபோது அதை சட்டப்பேரவையில் ஆதரித்தது விசிக. எங்கள் நிலைப்பாடு உள் ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல; கிரிமிலேயருக்கு எதிரானது. ஓபிசி சமூகத்துக்கு கிரிமிலேயர் மூலம் சமூகநீதிக்கோட்பாட்டை சிதைக்கும் பாஜகவின் சதியை அம்பலப்படுத்தி எதிர்த்து வருகிறது விசிக.
தலித்துகளுக்குள் கிரிமிலேயரை புகுத்தி சமூகநீதியை அழித்தொழிக்க முயற்சிக்கும் பாஜகவை தொடர்ந்து அம்பலப்படுத்துவதால் திரு. முருகன் காழ்ப்புணர்ச்சியில் சமூகநீதி என உளறுகிறார். இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே தெரியும். ஆகவே, விசிகவுக்கு பாஜகவிலிருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது.
அருந்தியருக்கான உள் ஒதுக்கீட்டை விசிக ஆதரித்தாலும் திரு. முருகன் அவர்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். இந்த உள் ஒதுக்கீட்டை புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பது அவருக்கு தெரியும். ஆனால், அவர்களை கண்டிக்காமல் விசிகவை குறிவைப்பது ஏன்?
ஏனென்றால், விசிகவில் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தோர் அதிகம் இருக்கிறார்கள். பதவியிலும் களமாடுகிறார்கள். இந்த கோபத்தில் தான் விசிக மீது வெறுப்பை கொட்டுகிறார். விசிக ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் எமது இலக்கு. அதை நோக்கி பயணிப்போம்’ என்றார்.