
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பதே எங்களின் அரசியல் குறிக்கோள் என்று தவெகவின் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
கட்சியின் கொள்கைகளையும், அரசியக் குறிக்கோளையும் குறிப்பிட்டு மாநாட்டில் விஜய் பேசியவை பின்வருமாறு:
`ஜனநாயகம், சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இரு மொழி ஆட்சிக் கொள்கை, இயற்கை வளப்பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற வளர்ச்சி, உற்பத்தி திறன், உடல் நலனைக் கெடுக்கும் எவ்வகையான போதையும் இல்லாத தமிழகம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமதர்ம சமூகத்தை உருவாக்குவதுதான் நம்முடைய முக்கியமான இலக்கு. கால மாற்றத்துக்கு ஏற்ற வகையில் கொள்கை கோட்பாட்டில் மாற்றமும் மாறுதலும் வந்துதான் தீரும் அதைத் தவிர்க்க முடியாது.
எங்களின் இந்த அரசியல் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கப்போவது பெண்கள். என்னுடன் பிறந்த தங்கை வித்யா இறந்தபோது அந்த சம்பவம் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் கொஞ்சம் கூட குறையாத அளவுக்கான பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம்.
தகுதி இருந்தும் தடையாக இருக்கிறது இந்த நீட். வாய் நிறைய விஜய் அண்ணா என்று மனதார கூப்பிடும் இந்தப் பெண் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை என அனைத்திலும் நிரந்தர பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போது ஒரு முடிவு செய்தேன்.
இனிமேல் கவலைப்பட வேண்டாம் உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் தோழன், உங்கள் விஜய் களத்துக்கு வந்துவிட்டேன். எல்லோருக்குமான ஆளாக நான் இருப்பேன். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பதே எங்களின் அரசியல் குறிக்கோள்.
வாழ்வதற்கு வீடு, வயிற்றுக்கு சோறு, வருமானத்துக்கு வேலை இதுதான் எங்களின் அடிப்படை செயல்திட்டம். இந்த மூன்றுக்கும் உத்தரவாதம் வழங்க முடியாத அரசாங்கம் இருந்தால் என்ன போனால் என்ன?’ என்றார்.