கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநரிடம் இபிஎஸ் மனு

"ஆளுங்கட்சியின் காவல் துறை விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது, நீதி கிடைக்காது."
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநரிடம் இபிஎஸ் மனு
படம்: https://x.com/AIADMKITWINGOFL

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இதுதொடர்புடைய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனு அளித்துள்ளார்.

இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் விவகாரத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். விசாரணை நேர்மையாக, நியாயமாக நடைபெற வேண்டுமென்றால், சிபிஐ விசாரிக்க வேண்டும். ஏற்கெனவே செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், மக்களுக்கு அது பயனளிக்கவில்லை. அப்போதும் திமுகவினர் மற்றும் அமைச்சர்கள் சிலர் துணைபோவதாக செய்திகள் வந்துள்ளன. ஆளுங்கட்சியின் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ய முடியாது.

ஆளுங்கட்சியின் காவல் துறை விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது, நீதி கிடைக்காது. ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளார்கள். அதன் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான்.

மக்களிடத்தில் இருக்கும் சந்தேகத்தைப் போக்க, நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டுமென்றால், அதை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இதைச் சுட்டிக்காட்டி ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in