

ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக செங்கோட்டையன் மற்றும் ஓ. பன்னீர்செலவம் எங்களோடு கரம் கோர்த்துள்ளார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் மற்றும் 63-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிலுள்ள அவருடைய நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், அதற்கான முயற்சிகளை 10 நாள்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, கே.ஏ. செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் அடுத்தடுத்து பறிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் தான் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் முதலில் ஒரே காரில் பயணித்து வந்தார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், செங்கோட்டையன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஒரே காரில் பயணித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த அவர், "எனக்குத் தெரியவில்லை. வந்தால் தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்" என்றார் எடப்பாடி பழனிசாமி.
இதைத் தொடர்ந்து, பசும்பொன்னுக்கு வரும் முன் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வழியிலேயே சந்தித்தார்கள். பிறகு, மூவரும் ஒரே வாகனத்தில் பசும்பொன்னுக்கு வந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் அணிவித்து கூட்டாக மரியாதை செலுத்தினார்கள். இதன்பிறகு, மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
"தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118-வது ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுடைய அபிமானத்தை நல்லெண்னத்தை, நம்பிக்கையை, அவர் இந்த நாட்டுக்குச் செய்திருக்கிற நன்மையைக் கருதி அவருக்கு மிகப் பெரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு, நம்பிக்கையோடு இன்று கூடியிருக்கிறோம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சன்னதியில் இதற்கான சபதம் மேற்கொண்டுள்ளோம்.
அனைவரும் ஒருங்கிணைந்து, ஒரே குடையின் கீழ் நின்று மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் நிறுவிட வேண்டும் என்ற சபதத்தை மேற்கொண்டிருக்கிறோம். அதற்கு அத்தாட்சியாக தான் இன்று நாங்கள் பயணித்துள்ளோம். இந்த முயற்சி தொடரந்து நடைபெற்று, திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எங்களுடைய ஒருங்கிணைப்பு இருக்கும்" என்றார்.
டிடிவி தினகரன் பேசியதாவது:
ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ஓ. பன்னீர்செல்வத்துடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். செங்கோட்டையன் இன்று நமது பசும்பொன் தேவர் ஐயா அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துவதற்காக குருபூஜையில் நம்மோடு வந்து கலந்துகொண்டிருக்கிறார். ஜெயலலிதா தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வரும்போது, அவருக்கு முன்பாகவே ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இங்கு வந்து முகாமிட்டு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர்கள். இன்று அமமாவின் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நாங்கள் அனைவரும் இன்று தேவர் திருமகனார் ஐயா அவர்களின் குருபூஜை நாளில் இணைந்திருக்கிறோம். செங்கோட்டையனும் கொங்கு நாட்டிலிருந்து வந்து எங்களோடு கலந்துகொண்டிருக்கிறார்.
துரோகத்தை வீழ்த்த, தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி, ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியைக் கொண்டு வர ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக செங்கோட்டையன் மற்றும் ஓ. பன்னீர்செலவம் எங்களோடு கரம் கோர்த்துள்ளார்கள். தேர்தலில் எங்களுடையப் பணியை ஆற்றவிருக்கிறோம். ஏற்கெனவே, துரோகத்தை வீழ்த்ததான் அமமுக உருவாக்கப்பட்டது. அந்தத் துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு" என்றார் டிடிவி தினகரன்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கிறார். மூன்றுபேரும் ஒன்றாக இணைந்து பயணிக்கப்போகிறீர்களா என்று கேட்க்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ் "இங்கு நின்றிருக்கும் நாங்கள் அனைவருமே ஜெயலலிதாவின் தொண்டர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் நிறுவிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இணைந்திருக்கிறோம். சசிகலாவும் உறுதியாக இணைகிறார்" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
டிடிவி தினகரன் மேலும் கூறியதாவது, "சசிகலா மனதோடு எங்களுடன் எப்போதும் இருப்பார். தமிழ்நாட்டில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கிய அடிப்படை விதிகளுடன் கூடிய இயக்கத்தை உருவாக்குவது தான் எங்களுடைய முதல் குறிக்கோள். அதற்காக தான் அமமுக தொடங்கப்பட்டது. இந்த எண்ணத்தில் தான் நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம். எங்களுக்கு அதிமுக எதிரி கிடையாது. எடப்பாடி பழனிசாமி என்ற துரோக மனிதர் தான் அமமுகவின் எதிரி. அதைத் தாண்டி வேறு யாரையும் நாங்கள் எதிரியாக நினைக்கவில்லை" என்றார் டிடிவி தினகரன்.
கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில், "எம்ஜிஆர் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். ஜெயலலிதா எங்களை வாழ வைத்தவர். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒருங்கிணைவோம் என்றோம். அது தான் நீடிக்கிறது" என்று கூறினார் செங்கோட்டையன்.
OPS, TTV Dhinakaran, KA Sengottaiyan joined hands together in Pasumpon Muthuramalinga Thevar Guru Pooja
KA Sengottaiyan | TTV Dhinakaran | O Panneerselvam | AIADMK |