
செங்கோட்டையனைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை 10 நாள்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதையடுத்து அவரை, கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 6) அறிவித்தார். இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேனியில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது : அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் அபயக் குரலாக இருக்கிறது. அதற்காக 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், தலைமை நிலையச் செயலாளராகவும், கழக அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த செங்கோட்டையன், 10 நாட்கள் அவகாசம் கொடுத்தார். 50 ஆண்டு கால வரலாற்றில் 30 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட அதிமுக இன்றைக்கு தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது என்பதற்கு காரணம் அதிமுக பிரிந்திருக்கிறது என்பதுதான். அதை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த செங்கோட்டையனுக்கு இவ்வளவு பெரிய கொடும் தண்டனையா? செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். உலகிலேயே அதிமுக ஒன்றிணையக் கூடாது என்று பழனிசாமி மட்டும்தான் நினைத்து வருகிறார். அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” இவ்வாறு கூறினார்.
KA Sengottaiyan | ADMK | AIADMK | Edappadi Palaniswami | O Panneerselvam |