

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக - பாஜகவுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது. அக்கட்சியிலிருந்து சமீபத்தில் விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, பரப்புரைகளைத் திட்டமிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறிவந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், அதிமுக அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்டது.
ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலைப்பாடு
அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பைத் தொடங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். ஆனால் இன்னும் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் அதிமுகவிலும் சேர முடியாமல், திமுகவிலும் சேராமல் தனித்து விடப்பட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுப் படுத்தாமல் உள்ளார்.
முதலமைச்சருக்குப் பாராட்டு
இதற்கிடையில், இன்று சட்டப்பேரவையில் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவான ஐயப்பன், முதலமைச்சரின் உரையைப் புகழ்ந்து பேசினார். மீண்டும் ஸ்டாலின் தான் வெற்றிபெற்று முதலமைச்சராக வர வேண்டும். முதலமைச்சரை ரூ. 5000 கொடுத்ததற்காக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், காலை உணவுத் திட்டத்திற்காகப் பாராட்டாதது ஏன் என்று கேள்வி கேட்டு உரையாற்றினார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் ஆசியுடன் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பேசினார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் சபாநாயக்கர் அப்பாவுவையும் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
“திமுக ஐந்தாண்டு கால ஆட்சியைச் சிறப்பாக நிறைவு செய்த நிலையில், அதனைப் பாராட்ட முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தையே சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ ஐயப்பன் பிரதிபலித்தார். பொதுவான கருத்து என்னவென்றால், இன்றைக்கு இருக்கும் அரசுஅல் சூழ்நிலையில், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் நிலை, திமுக நாட்டிற்கு செய்த சாதனை மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வழி பிறந்துவிட்டது” என்றார்.
Former Chief Minister O. Panneerselvam has said that there is a possibility that DMK will come back to power.