பிரதமர் மோடி தியானம்: எதிர்க்கட்சிகளை விமர்சித்த அண்ணாமலை

"தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்புடைய விவாதங்களில் பங்கேற்க மாட்டோம் என்று கூறுவதன் மூலம் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது."
பிரதமர் மோடி தியானம்: எதிர்க்கட்சிகளை விமர்சித்த அண்ணாமலை

எதிர்க்கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் பிரதமர் மோடியின் தியான விவகாரத்தில் அரசியல் செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை கோயிலில் பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார். கோயிலில் வழிபட்ட பிறகு பிரதமர் மோடி தியானம் செய்வதற்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து அவர் பதிலளித்தார்.

"பிரதமர் தனிப்பட்ட முறையில் கன்னியாகுமரி வந்துள்ளார். ஒரு பாஜக தொண்டர்கூட அங்கு செல்லவில்லை. எதிர்க்கட்சியினருக்கு எதில் அரசியல் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. விவேகானந்தர் மண்டபம் விவேகானந்த கேந்திரத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தனியார் நிலம். இங்கு செல்ல அரசு அனுமதியோ, தேர்தல் ஆணையம் அனுமதியோ தேவையில்லை.

ஒருபுறத்தில் பிரதமர் தியானம் செய்து வருகிறார். மறுபுறம் மக்கள் வந்துசென்றுகொண்டிருக்கிறார்கள். யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. எதிர்க்கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் அரசியல் செய்கிறார்கள்.

தில்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணித் தலைவர்கள் சந்திக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை. பெரிய தலைவர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. இரண்டாம் நிலை தலைவர்களே இதில் கலந்துகொள்கிறார்கள்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்புடைய விவாதங்களில் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறுவதன் மூலம் இண்டியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளன. தேர்தல் வரையிலான நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது மு.க. ஸ்டாலினுக்குத் தெரியும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகவுள்ளார் என்பது அவர்களுக்கும் தெரிகிறது" என்றார் அண்ணாமலை.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வந்த தியானம் நிறைவடைந்துள்ளது. ஏழாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வடைந்தவுடன் வியாழக்கிழமை மாலை தியானத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நாளான இன்று பிற்பகல் 2.45 மணியளவில் தியானத்தை நிறைவு செய்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in