
2005-ல் நடந்த தேமுதிகவின் முதல் அரசியல் மாநாடு குறித்த காணொளியை வெளியிட்டு இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு என்று தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அரசியல் கட்சி தொடங்கும் முடிவை அறிவித்த கையோடு, செப்.14 2005-ல் தன் முதல் அரசியல் மாநில மாநாட்டை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியின் திருநகரில் நடத்தினார் விஜயகாந்த்.
மாநாட்டு மேடைக்கு சரியாக காலை 7.10 மணிக்கு வருகை தந்தார் விஜயகாந்த். இதனைத் தொடர்ந்து, மாநாட்டு மேடையில் சிறப்புரை ஆற்றிய விஜயகாந்த், தான் தொடங்கும் அரசியல் கட்சியின் பெயர், தேசிய முற்போற்கு திராவிட கழகம் என தொண்டர்களுக்கு மத்தியில் மூன்று முறை அறிவித்தார்.
இந்த மதுரை மாநாடு தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
`இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது’ என்றார்.