
கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று இரவு தொடங்கி, சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.