
கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைத்த தமிழக காவல்துறை, சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்திய இசைவாணியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச். ராஜா.
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் சார்பாக நடத்தப்பட்ட `மார்கழியில் மக்களிசை’ என்கிற இசை நிகழ்ச்சியில் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற இசை குழுவைச் சேர்ந்த கானா பாடகி இசைவாணி `ஐ அம் சாரி ஐயப்பா’ என்கிற பாடலைப் பாடினார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இது தொடர்பாக கரூரில் இன்று (நவ.26) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச். ராஜா பேசியவை பின்வருமாறு,
`கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலையிட்டு பக்தர்கள் செல்கின்ற இந்த சமயத்தில் சுவாமி ஐயப்பனைப் பற்றி கேலியும் கிண்டலுமாக இசைவாணி பாடியுள்ளார். இதை சினிமா இயக்குநர் பா. இரஞ்சித் போன்றோர் ஊக்குவிக்கின்றனர்.
தமிழக காவல்துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படை அமைத்தது இந்த அரசு. ஆனால் தற்போது இசைவாணியை கைது செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அப்படியென்றால் காவல்துறை ஹிந்து விரோதியாக இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. இது ஹிந்து விரோத அரசு என்பது நமக்குத் தெரியும்.
மாநில துணை முதல்வர் சனாதன ஹிந்து மதத்தை டெங்கு கொசு, மலேரியா கொசுவைப் போல அழிக்கவேண்டும் என பேசியுள்ளார். ஆனால் காவல்துறை அதுபோல இருக்கிறதா என்பது தெரியவில்லை. நாளை பிற மத தெய்வங்கள் குறித்து இவ்வாறு பாட்டுப்பாடும் சூழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் மதமோதல்கள் எழும். எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.
இந்நிலையில், சுவாமி ஐயப்பன் குறித்து மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் பாடியதாக இசைவாணி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் மாநில மகளிரணி தலைவி சுசிலாதேவி. மேலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் இசைவாணி மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.