மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை இடம்: ஒப்பந்தத்தில் ஸ்டாலின் - கமல் கையெழுத்து!

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை இடம்: ஒப்பந்தத்தில் ஸ்டாலின் - கமல் கையெழுத்து!
படம்: https://twitter.com/maiamofficial

2025 மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுவது தொடர்பாக நீண்ட நாள்களாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயம் சென்றார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரை வரவேற்றார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினுடன் கமல்ஹாசன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், 2025 மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தத்தில் ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவித்தார்.

அவர் கூறியதாவது:

"இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை. என் கட்சியும் அப்படிதான். ஆனால், இந்தக் கூட்டணிக்கு எங்களுடைய முழு ஒத்துழைப்பும் இருக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம். எனவே, எங்கு கையைக் குலுக்க வேண்டுமோ, அங்கு கையைக் குலுக்கியிருக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in