கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் மூலம் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் சிவராமன் என்பவர் காவல் துறையினர் கைது செய்வதற்கு முன்பே எலி மருந்து சாப்பிட்டதாகவும், இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டன. இதில் சிகிச்சைப் பலனின்றி இவர் உயிரிழந்தார். சிவராமன் உயிரிழப்பதற்கு ஒரு நாள் முன்பு இவரது தந்தையும் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார். மேலும், சமூகநலத் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவை அமைத்தார்.
இதனிடையே கடந்த ஜனவரியில் வேறொரு தனியார் பள்ளியில் இதேபோல போலி என்சிசி முகாம் நடத்தி, அந்தப் பள்ளியிலுள்ள மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சிவராமன் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். இவருடன் வேறொருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் மூலம் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இருவேறு வழக்குகளில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.