படம்: https://www.facebook.com/paramporulfoundation
படம்: https://www.facebook.com/paramporulfoundation

தஞ்சாவூரில் மகாவிஷ்ணு மீது புகார்

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
Published on

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக மகாவிஷ்ணு மீது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு. இரு பள்ளிகளிலும் இவர் அறிவியலுக்குப் புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் என்பவரை மரியாதை குறைவாக நடத்தியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமானது. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார். அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்கள். சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் காவல் நிலையங்களில் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே, இன்று பிற்பகல் சென்னை வருவதாகவும் ஓடி ஒளியக்கூடிய அளவுக்குத் தான் எதுவும் பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்து நேற்று காணொளி வெளியிட்டார். இந்த நிலையில், இன்று பகல் 1.30 மணியளவில் மெல்போர்னிலிருந்து சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவைக் காவல் துறையினர் ரகசியமான இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை வந்தடைந்து சில மணி நேரத்துக்குப் பிறது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் 92(a) பிரிவிலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 192, 196 (1) a, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாகப் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in