அரசுப் பள்ளிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 28 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்று கூறப்படும் மகாவிஷ்ணு என்பவர் மறுபிறவி, முற்பிறவிகளில் செய்யும் பாவ புண்ணியங்கள் என அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பேசியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை அரசுப் பள்ளியிலும் பேசுவதற்காக மகாவிஷ்ணு அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் பள்ளியில் முந்தையப் பிறவிகளில் செய்த பாவ-புண்ணியங்களால்தான் இந்தப் பிறவியில் மனிதர்கள் பலன்களை அனுபவிக்கிறார்கள் எனக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
அப்போதுதான், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு அந்தப் பள்ளியில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர் என்பவர் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து ஆசிரியர் சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் மகாவிஷ்ணு. இந்தக் காணொளி நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கமளித்தார். அசோக் நகர் பெண்கள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சைதாப்பேட்டை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் செங்கல்பட்டு மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மகாவிஷ்ணுவுக்குத் தொடர்புடைய இடங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளார்கள். திருப்பூரிலுள்ள பரம்பொருள் அமைப்பின் அலுவலகத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
இவற்றுக்கு மத்தியில் இவர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தான் சென்னை வரவிருப்பதாகக் காணொளியை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலிருந்தபடி வெளியிட்டுள்ள இந்தக் காணொளியில், தனக்குத் தெரிந்த விளக்கத்தை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு அளிக்கவுள்ளதாகவும் அவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவாகவும், மனம் புண்படும் வகையில் பேசியதாகவும் மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையம் வரவுள்ள மகாவிஷ்ணுவைக் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லவுள்ளதாகத் தெரிகிறது.