
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த டிச.23 இரவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
கடந்த டிச.23-ம் தேதி இரவில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், தனது ஆண் நண்பருடன் மாணவி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு மர்ம நபர்கள், அந்த ஆண் நண்பரை அடித்துத் துரத்திவிட்டு, மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மாணவி புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரத்தை விசாரிக்க காவல்துறையினரால் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அதன்பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளின் காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அதனை அடுத்து பல்கலைக்கழக காவலாளிகள், பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளிகள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில், நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வரும் ஞானசேகரன் என்பவரைக் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்குத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள்?
திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்’ என்றார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
`சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது.
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.