சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் வாலிபர் ஒருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.
துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் இன்று (செப்.19) காலை அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சாலைக்கு அருகே கிடந்த ஒரு சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்த சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளை ஆராய ஆரம்பித்தனர் காவல்துறையினர்.
மூன்று நாட்களுக்கு முன்பு மாதவரம் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற இளம்பெண் காணாமல் போனார். அது தொடர்பாக அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அந்த இளம்பெண்ணின் கைப்பேசி கடைசியாக துரைப்பாக்கம் பகுதியில் வைத்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதை அடுத்து நேற்று (செப்.18) இரவு காணாமல் போன இளம்பெண் குறித்து துரைப்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அப்போது காவல்துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதே துரைப்பாக்கம் பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சூட்கேஸில் இருந்து ஒரு பெண்ணின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துரைப்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் நடத்திய விசாரணையில் சூட்கேஸில் இருந்த உடல், மாதவரத்தில் காணாமல்போன இளம்பெண் தீபா என்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சூட்கேஸ் கைப்பற்றப்பட்ட பகுதியைச் சேர்ந்த சிசிடிவியை ஆராய்ந்த காவல்துறை, தீபாவின் படுகொலைக்குக் காரணமான அதே பகுதியில் வசித்து வந்த வாலிபரைக் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.