திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 7 அறிவிப்புகள் என்னென்ன?
தமிழக அரசு முன்னெடுத்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்களின் 2-ம் நாளான இன்று (டிச.31), கன்னியாகுமரியில் திருக்குறள் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,
`இந்தத் திருக்குறள் விழாவை முன்னிட்டு சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
முதலாவதாக, முக்கடல் சூழும் குமரி முனையில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் சிலையை சென்றடையும் வகையில் 3 புதிய படகுகள் வாங்கப்படும். முதல் படகிற்கு, பெருந்தலைவர் காமராஜர் பெயரும், இரண்டாவது படகிற்கு மார்ஷல் நேசமணி பெயரும், மூன்றாவது படகிறகு ஜி.யு. போப் பெயரும் சூட்டப்படும்.
இரண்டாவதாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் கொண்ட ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்கங்கள் நடத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.
மூன்றாவதாக, ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பாக கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும். நான்காவதாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதி வாரம், குறள் வாரம் கொண்டாடப்படும்.
ஐந்தாவதாக, தமிழ் திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும். ஆறாவதாக, திருக்குறளும், விளக்க உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவதைப் போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஏழாவதாக, வள்ளுவர் சிலையுடன் சிறப்பு பெற்றிருக்கக் கூடிய கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும்.
திருவள்ளுவர் வெறும் சிலையல்ல, திருக்குறள் வெறும் நூலல்ல. அவை நம் வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க நினைக்கும் தீமைகளைத் தடுக்கும். (திருவள்ளுவருக்குக்) காவி சாயம் பூச நினைக்கும் தீய எண்ணங்களையும் விரட்டி அடிக்கும்’ என்றார்.