வெளிமாநிலங்களுக்கு வழக்கம்போல் சேவை தொடரும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு | Omni Bus |

21 நாட்களில் மொத்தம் ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது....
ஆம்னி பேருந்துகள் (மாதிரிப்படம்)
ஆம்னி பேருந்துகள் (மாதிரிப்படம்)
2 min read

வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து கடந்த நவம்பர் 7 அன்று கேரளா சென்ற ஆம்னி பேருந்துகள், கேரள அரசால் சிறை பிடிக்கப்பட்டு ரூ. 70 லட்சத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், கர்நாடகா போக்குவரத்து துறையும் 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ. 2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ. 1.15 கோடி வரை வசூலித்தது. இதற்கு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்டின்படி வசூலித்ததாக காரணம் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கடந்த நவம்பர் 7 முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்டு வந்த 230 ஆம்னி பேருந்துகளின் சேவைகளை நிறுத்தி வைத்தது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். மேலும், கடந்த நவம்பர் 10 முதல் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் ஆம்னி பேருந்து சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவித்துள்ளன. இதுகுறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“ஒவ்வொரு மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு தமிழ்நாட்டின் சாலை வரி ரூ. 1,50,000. ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் வரி ரூ. 90,000 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக ரூ. 2 லட்சம் என மொத்தம் காலாண்டுக்கு ரூ. 4,50,000 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம். இதுகுறித்து, நவம்பர் 10 அன்று போக்குவரத்து துறை அமைச்சரையும், நவம்பர் 11 அன்று போக்குவரத்து ஆணையரையும் சந்தித்து, கோரிக்கை வைத்தோம்.

மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 1,350-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்ததால், தினசரி 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்து, உரிமையாளர்களுக்கு தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதால், கடந்த 21 நாட்களில் மொத்தம் ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக முதலமைச்சருக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் போக்குவரத்து துறை ஆணையரைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆணையரும் அமைச்சரும் முதலமைச்சரின் ஆலோசனைகளைப் பெற்று நல்ல முடிவை ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறியுள்ளனர். அரசு இதை பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், பயணிகள் நலனையும், அய்யப்பன் கோவில் பக்தர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளை இயக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, வெளி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் வழக்கம்போல் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Omni Bus Owners Association has announced that Omni bus services to neighbor states will operate as usual from today.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in