
வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள், அகில இந்தியா சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று இயக்கப்படும் பேருந்துகள். நாகாலாந்து மற்றும் புதுச்சேரி பதிவெண்ணைக் கொண்டே பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை சுற்றுலாப் பேருந்துகளைப் போல இயங்காமல், பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகளைப்போல இயங்கி வருவதால், தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக, வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை, தமிழ்நாட்டில் மறுபதிவு செய்ய போக்குவரத்துத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மறுபதிவு செய்ய ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு மூன்று முறை அவகாசம் வழங்கப்பட்டன. இருந்தபோதிலும், பதிவெண் மறுபதிவு செய்யப்படாமலே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
652 ஆம்னி பேருந்துகளில் 547 பேருந்துகள் இன்னும் தமிழ்நாட்டு பதிவு எண்ணுக்கு மறுபதிவு செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 14 நள்ளிரவு முதல் இயங்கத் தடை என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும் இதை உறுதி செய்துள்ளார். பதிவு எண்ணை மறுபதிவு செய்ய அவகாசம் தேவைப்பட்டால், போக்குவரத்துத் துறை ஆணையரை அணுகி சிறப்பு அனுமதியுடன் பேருந்தை இயக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.