
பொங்கலுக்கான சிறப்புப் பேருந்துகள் குறித்து அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் டோல்கேட்டுகளில் பயணிகளை ஏற்றுவதை ஆம்னி பேருந்துகள் தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
சென்னையில் இன்று (ஜன.6) செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசியவை பின்வருமாறு.
`ஜனவரி 10-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, 13-ம் தேதி திங்கட்கிழமை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அந்தப் பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும். 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,104 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. எனவே ஒட்டுமொத்தமாக 21,904 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. பொங்கல் திருநாள் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு ஏதுவாக 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,790 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 6,926 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இந்தப் பேருந்துகளை முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் 9 முன்பதிவு மையங்கள் செயல்படும். இணையத்தளத்தின் வாயிலாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். பேருந்து இயக்கங்கள் குறித்துப் புகார் அளிக்கவும், தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் 9445014436 என்ற தொலைபேசி எண்ணை எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் செய்ய 1800 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மேலும், கோயம்பேட்டிலிருந்து மதுரவாயில் செல்லும் சாலையில் பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றுவதை ஆம்னி பேருந்துகள் தவிர்க்கவேண்டும். டோல்கேட்டுகளில் பேருந்துகளை நிறுத்திப் பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் இடைஞ்சல் இல்லாமல் பயணிப்பதற்கு அவர்கள் பேருந்துகளை இயக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில், இது தொடர்பாக ஆம்னி பேருந்து சங்கத்தினரை அழைத்துப் போக்குவரத்து ஆணையர் பேசவுள்ளார்’ என்றார்.