சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, இன்று காலை (அக்.1) கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான கோவை வடவள்ளியைச் சேர்ந்த 69 வயது காமராஜ் என்பவர், மூளைச்சலவை செய்யப்பட்டு ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் தன் இரு மகள்களையும் மீட்டுத்தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், வி. சிவஞானம் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று (செப்.30) விசாரித்தது. அப்போது ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் காமராஜின் இரு மகள்களிடமும் விசாரணை நடத்தினார்கள் நீதிபதிகள்.
இதனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விவரங்களை வரும் அக்.4-க்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இந்நிலையில் இன்று காலை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் பேராசிரியர் காமராஜின் இரு மகள்கள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் பிற நபர்களிடமும் அதிகாரிகளால் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.