கன்னியாகுமரியில் புதிய அணுக்கனிம சுரங்கம்: அக்.1-ல் கருத்துக் கேட்புக் கூட்டம்

கதிரியக்கத் தன்மைகொண்ட அணுக்கனிமங்கள் தோண்டியெடுக்கப்பட்டால் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்
கன்னியாகுமரியில் புதிய அணுக்கனிம சுரங்கம்: அக்.1-ல் கருத்துக் கேட்புக் கூட்டம்
PRINT-125
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசின் அணுசக்தித் துறை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அக்டோபர் 1-ல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தாலுகாவைச் சேர்ந்த கிராமங்களான கீழ் மிடாலம், மிடாலம், எணயம் புத்தன்துறை, ஏழு தேசம், கொல்லங்கோடு ஆகியவற்றில் இருந்து 1,144 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியில் இருந்து மோனோஸைட், ஸிர்கான், இல்மனைட், ரூடைல், சிலிமைட், கார்னைட் போன்ற அணுக்கனிமங்களைத் தோண்டி எடுக்க மத்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் IREL நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

`ஏற்கனவே இது அணுக்கதிரியக்கம் அதிகமாக உள்ள பகுதி, எனவே இங்கு கதிரியக்கத் தன்மைகொண்ட அணுக் கனிமங்கள் தோண்டியெடுக்கப்பட்டால் அதனால் மேலும் அதிகரிக்கும் கதிரியக்கம் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும், எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன்.

மேற்கூறிய 5 கிராமங்களும் கடலோரத்தை ஒட்டி அமைந்துள்ளன. இந்த 5 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் புதிதாக அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அக்டோபர் 1-ல் நடத்தப்படும் என மத்திய அரசின் IREL நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் சில தனியார் நிறுவனங்களால் பல வருடங்களாக சட்டவிரோதமான முறையில் தாது மணல் கொள்ளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து இந்தப் பகுதியின் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in