நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: ஆதாரத்தைக் காட்டிய ஓபிஎஸ்! | O Panneerselvam

"அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தங்களிடம் பேச விரும்புகிறார்" என்ற குறுஞ்செய்தி...
கோப்புப்படம்
கோப்புப்படம்@OfficeOfOPS
1 min read

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.

பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக கடந்த வாரம் தமிழ்நாடு வந்தார். அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். எனினும், பிரதமரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 31 அன்று காலை நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலினை மூன்று முறை சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தன்னிடம் கூறியிருந்தால், பிரதமரைச் சந்திப்பதற்கான அனுமதியை வாங்கித் தந்திருப்பேன் என்று கூறினார்.

இதற்குப் பதளிக்கும் விதமாக ஆகஸ்ட் 2 அன்று அறிக்கையை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம், "தன்னிடம் சொல்லியிருந்தால், பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதில் எள்ளளவும் உண்மை இல்லை.

நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைப்பேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. நயினார் நாகேந்திரனிடம் பேச வேண்டுமென்ற தகவலைக் குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டு கடந்த ஜூலை 14 அன்று கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.

இதிலிருந்து, பிரதமரைச் சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மையைப் பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கும் மறுப்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன், "கடிதம் அனுப்பியிருக்கிறார் என்று சொல்வதே எனக்குத் தெரியவில்லை. அது என்னை வந்து சேரவில்லை. கடிதம் வந்து சேர்ந்தால், எடுத்துக் காட்டுகிறேன். யார் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள், பொய் சொல்லியிருக்கிறார்கள் என்பது அப்போது தெரியும்" என்றார் நயினார் நாகேந்திரன்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் இன்று புதிய தலைமுறை செய்தியாளரைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் காட்டிய குறுஞ்செய்தி ஆதாரத்தில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தங்களிடம் பேச விரும்புகிறார்" என்ற குறுஞ்செய்தி நயினார் நாகேந்திரன் என்று பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணுக்கு இருமுறை அனுப்பப்பட்டுள்ளது.

Nainar Nagendran | O Panneerselvam | AIADMK |ADMK |BJP | TN BJP Chief | Tamil Nadu BJP | NDA

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in