

அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு தர்ம யுத்தம் ஆரம்பித்தது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி திமுகவில் சமீபத்தில் இணைந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தன் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு தர்மயுத்தம் ஆரம்பித்தது தான் என்று கூறினார்.
மிகவும் மனவருத்தப்பட்டேன்
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“ஜெயலலிதா எப்போது காலமாவார் என்று காத்திருந்து, அவர் இறந்ததும் 2016-ல் கடைசி மாதங்களில் அவர்களது வேலைகளை ஆரம்பித்தனர். எனக்கு எதிராக இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் பணியாற்றியுள்ள நான் எத்தனையோ நிர்வாகிகளை அவரிடம் அழைத்துச் சென்று சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். கிட்டத்த 9 அமைச்சர்களை ஜெயலலிதா பொறுப்பிலிருந்து விடுவித்தபோது நான் அவர்களுக்காக பேசி அதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஆனால் அவர்களும் ஒன்று சேர்ந்துகொண்டு என்னை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் என்று எண்ணும்போது நான் மிகவும் மனவருத்தப்பட்டேன். அதன் அடிப்படையில் சசிகலா என்னை முதலமைச்சராக நியமித்தார். எனக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கினார்.
தர்மயுத்தம் தொடங்கியது தவறு
வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு தர்ம யுத்தத்தைத் தொடங்கியதுதான். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக்கப்பட்டிருந்தார். அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தோம். நானும் டிடிவி தினகரனும் இணைந்தால் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என்ற நிலைமை இருந்தது. அதற்கு முன் என்னைச் சந்தித்து அதிமுக பிளவு பட்டிருக்கிறது, நீங்கள் நினைத்தால் ஒன்றிணைக்க முடியும் என்று கேட்டுக் கொண்டார். நான் அதற்கு ஒப்புக்கொண்ட காரணத்தால் என்னிடம் வந்து எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்காதீர்கள், அவரை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்று சொன்னதை எல்லாம் நான் ஏற்கவில்லை. நான் அவருக்கு ஆதரவு தந்ததால்தான் அவர் நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சர் ஆக இருக்கக் கூடிய சூழல் இருந்தது. அந்த நன்றி கூட இல்லாமல் ஆரம்பத்திலிருந்தே என்னை அதிமுகவிலிருந்து விலக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவர் செயல்பட்டார். அதைத்தான் நான் எதிர்த்தேன்.
என் பெரும் அரசியல் தவறு
நான் அரசியலில் செய்த தவறு என்றால் அது எடப்பாடி பழனிசாமியின் அரசைக் காப்பாற்றியதுதான். அவருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புக்கும் ஒப்புக்கொண்டது. நான்கரை ஆண்டுகள் அவர் செய்ததற்கெல்லாம் நான் கண்களை மூடிக்கொண்டு எந்தப் பிரச்னையும் செய்யக் கூடாது என்று ஒத்துழைத்தேன். அதிமுக என்னால் பிளவுபடக் கூடாது என்று நான் அமைதியாக இருந்தேன். கடைசியாக 2021 தேர்தல் வருவதற்கு ஓர் ஆண்டுக்கு முன் ஒற்றைத் தலைமை என்ற பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று பிரச்னையைக் கிளப்பினர்.
ஜெயலலிதாவுக்கு துரோகமா?
நீங்கள்தான் பொதுக்குழுவில் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அறிவித்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்க ஒப்புக் கொண்டீர். அதன்பின் ஜெயலலிதாவின் பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று நீங்களே சொன்னால் அது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம் போல் ஆகிவிடாதா என்று கேட்டேன். அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை” என்றார்.
Former Chief Minister O. Panneerselvam said that the biggest mistake I made in politics was starting a Dharma Yuddha.