எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறத்தாழ இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து நாள்தோறும் புதிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் வெளியேறியுள்ளார்கள். கூட்டணிக் கட்சிகளை அண்ணாமலைப் போல நயினார் நாகேந்திரன் சரிவர கையாளவில்லை என டிடிவி தினகரன் விமர்சித்தார்.
இதற்கிடையே, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்கச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். இவர் கெடு விதித்து 5 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், செங்கோட்டையன் வசம் இருந்த கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹரித்வார் செல்வதாகச் சொல்லி தில்ல சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து அரசியல் சூழல் பற்றி பேசியதாகக் கூறினார்.
இந்தச் சூழல்களுக்கு மத்தியில் அதிமுகவுடன் இணைய விரும்பும் ஓ. பன்னீர்செல்வத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிற தத்துவத்தின் அடிப்படையில், அது எந்த ரூபத்தில் எப்படி நடந்தாலும், நான் முழு மனதோடு வரவேற்கிறேன். அதற்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருடைய மனதிலும் உள்ளது. ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்தால் தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும்.
என்னைப் பொறுத்தவரை கட்சி இணைவது குறித்து நான் எவ்விதக் கோரிக்கையையும் வைக்கவில்லை. அரசியலில் எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்" என்றார்.
அதிமுக மீண்டும் ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமி சம்மதித்தால், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், "பல பிரச்னைகளைப் பேச வேண்டியுள்ளது. 6 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இந்த 6 வழக்குகளும் எங்களுடைய தர்மயுத்தத்தின் அடிப்படை. இது நிறைவேறும் நேரத்தில் நாங்கள் யோசனை செய்வோம்" என்றார்.
மேலும், "என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையன் எடுத்துள்ள முயற்சி, உறுதியாக வெற்றி பெறும். அதற்கு எனது வாழ்த்துகள். தில்லியிலிருந்து இதுவரை எனக்கு அழைப்பு எதுவும் இல்லை" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
இதற்கிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைகிறேன் என டிடிவி தினகரன் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு, "நல்ல கருத்து, ஆழமான கருத்து, சத்தான கருத்து" என்று ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
ADMK | AIADMK |Edappadi Palaniswami | O Panneerselvam | TTV Dhinakaran | BJP | NDA | BJP |