தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவாகி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தேர்தல் வாக்குறுதிக்காக குழு ஒன்றை அமைத்து தயாரித்து வருகிறது. அதிமுக சார்பில் மூன்று கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகியுள்ளன.
தனித்துப் போட்டியிடும் நாதக
இதற்கிடையில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி, தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026 என்ற தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டார்.
நாம் தமிழர் கட்சியின் வாக்குறுதிகள்
அதன்படி
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குத் தனித் தொகுதி உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் தேசிய மரமாக பனை மரம் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும்.
அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
தலைமைச் செயலகம், சட்டமன்ற வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.
அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
சமூக நீதி, வாழ்வியல், தொன்மம், ஒழுக்கம் முதலியவை தொடக்கப்பள்ளி முதலே கற்றுத்தரப்படும்.
நீர்நிலைகளின் கரைகளில் ஆல், அரசு, பனை, புங்கை, பூவரசு, மூங்கில், வேம்பு, புளி போன்ற மரங்கள் நடப்படும்.
தண்ணீர் வணிகத்திற்கு தடைவிதிக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் அரசே தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்.
குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும்.
வேளாண் பொருட்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்த்தப்படும்.
மருத்துவப் படிப்பு தூய தமிழ்மொழியில் நடத்தப்படும்.
அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்.
மாவட்டம்தோறும் புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்.
கட்டணமில்லாத் தங்கும் விடுதிகள் வசதி வழங்கப்படும்.
விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
அனைத்து தொகுதிகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
மாற்றுதிறனாளிகளுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க சிறப்பு கடலோர காவல்படை 'நெய்தல் படை' என்ற பெயரில் உருவாக்கப்படும்.
பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை, ஆண் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை என்று மாற்றியமைக்கப்படும்.
காடுகளைப் பாதுகாக்கச் சிறப்பு திட்டகங்களும், புதிய சட்டங்களும் உருவாக்கப்படும்.
சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்குடிமக்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை.
படிப்படியாக ஓராண்டிற்குள் மது ஒழிக்கப்படும்.
ஆவணப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரப்படும்" என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.
தொடர்ந்து வாக்குறுதிகளை விளக்கிப் பேசிய அவர், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அன்பான சர்வாதிகார ஆட்சி முறை அமையும் என்று கூறினார்.
Seeman, the coordinator of the Naam Tamilar Party, has said that if the party comes to power in Tamil Nadu, five capitals will be created.