
தமிழக அரசால் தனக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி மற்றும் தன் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை ஆகியவற்றில் திருப்தியில்லை என்று தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார் மீது மதுரையைச் பேராசிரியை நிதிதா நகை திருட்டுப் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அஜித்குமார் காவல் மரணம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை காவலர்கள் 5 பேரைக் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கு மீதான விசாரணை, நீதிபதிகள் எம்.எஸ். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வுக்கு முன்னிலையில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது.
இதற்காக அஜித்குமாரின் தம்பி நவீன் குமார் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
`அவர்கள் அளித்தது நேரடி அரசுப் பணி அல்ல, (அது) அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம். நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பணியிடம் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போதைய சூழலில் நான் அவ்வளவு தொலைவில் சென்று வேலைபார்க்க முடியாது. மாற்றித்தரும்படி கேட்டிருக்கிறேன், மாற்றித் தருவதாகக் கூறியிருக்கின்றனர்.
ஆனால் இதுவரை மாற்றித் தரவில்லை. 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அது வளர்ச்சியடையாத பகுதியில் இருக்கிறது. ஊருக்கு வெளியே தொலைவில் இருக்கிறது. அந்த நிலத்தால் எந்தப் பயனும் கிடையாது.
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இன்னும் நல்ல முறையில் விசாரித்தால் நன்றாக இருக்கும். (இந்த வழக்கை) சிபிஐ விசாரிப்பதே சரியான முடிவு. (தனிப்படை) காவலர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளை விரைவில் கண்டறிந்து, அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பது என் கோரிக்கை’ என்றார்.
அதேநேரம், காவல் மரண விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நடத்திய விசாரணையின் முடிவில், காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த திருட்டு வழக்கை சிபிஐ அமைப்பு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.