
இன்று (நவ.17) சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், திருமாவளவன் எங்களோடுதான் இருக்கிறார் அதிமுகவின் ஐ.எஸ். இன்பதுரை பேசியதற்கு, வேறு கூட்டணிக்கு செல்ல விசிகவுக்கு அவசியம் இல்லை என பதிலளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதீனியம் என 3 புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை சமீபத்தில் அமல்படுத்தியது மத்திய அரசு. இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து, தமிழக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சென்னை காமராஜர் அரங்கத்தில் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் எ.பி. ராபர்ட் புரூஸ், சி.பி.ஐ. பொதுச்செயலாளர் டி.ராஜா, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய இன்பதுரை, `என் பக்கத்திலே அண்ணன் திருமாவளவன் இருக்கிறார். திருமாவளவன் எங்கு செல்வார் என்று தமிழ்நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. இங்கேதான் இருக்கிறார், எங்களோடுதான் இருக்கிறார். நான் அரசியல் பேசவில்லை. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும், அங்கு வருவார் என்று கூறினேன். திருமாவளவன் நம்மோடுதான் இருக்கிறார். நம்மோடுதான் இருப்பார், நல்லவர்களோடுதான் இருப்பார்’ என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், `மக்களோடு இருப்போம். அன்பு சகோதரர் இன்பதுரைக்கு இதுதான் பதில். கட்சிகள் அல்ல, மக்களோடு நிற்போம். மக்களுக்காக போராடுபவர்கள் யாராக இருந்தால் என்ன எந்த அடையாளத்துடன் இருந்தால் என்ன? அடையாளம் முக்கியமல்ல.
கட்சி, சாதி, மத அடையாளங்களைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் நாம் பக்குவப்படவேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். யாரும் எந்தக் கட்சியிலும் இருக்கலாம். எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக்கொள்ளலாம் அதில் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு என் கொள்கை எனக்கு. தேர்தல் அரசியல் என்பது உத்தி.
தேர்தல் அரசியல் என்றால் கட்சி நலன், காலச் சூழலைக் கொண்டு முடிவெடுக்க வேண்டும். வேறு கூட்டணிக்கு செல்ல விசிகவுக்கு அவசியம் இல்லை. இண்டியா கூட்டணியில் தற்போது இருப்பதால் வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்கத் தேவையும் இல்லை’ என்றார்.