நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு என்ற சொல் நிதிநிலை அறிக்கையில் இல்லை. ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும் செயலிலும் தமிழ்நாடு இல்லை
நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்
1 min read

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்குப் புதிய திட்டங்கள் அறிவிக்காததைக் கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் அளித்த பேட்டியின் சுருக்கம்:

`மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒரு சில மாநிலக்கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகம்.

தமிழகத்தின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களை நிதியமைச்சர் மறந்துவிட்டார். தமிழ்நாடு என்ற சொல் நிதிநிலை அறிக்கையில் இல்லை. ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும் செயலிலும் தமிழ்நாடு இல்லை.

பாராபட்சமும் ஏமாற்றமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கிறது. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையானது அந்நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த நிதி நிலை அறிக்கையில் நீதி இல்லை, அநீதிதான் அதிகம் இருக்கிறது.

அரசியலைத் தேர்தல் களத்தில் பார்த்துக்கொள்ளலாம் அனைவரும் இணைந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நேற்று கூறினார். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகளைச் செய்வதே ஒரு சிறந்த அரசு. அப்படித்தான் தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. இதை பார்த்து ஒன்றிய அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வரும் 27-ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நான் பங்கேற்றகத் திட்டமிட்டிருந்தேன். அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பதைக் கண்டித்து, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்.

தமிழ்நாட்டின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம். நாளை (ஜூலை 24) தமிழக எம்.பி.க்கள் தில்லியில் போராட்டம்  நடத்த இருக்கிறார்கள்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in