
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களைச் சொல்லத் தனக்குப் பயமில்லை என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தவெக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட 2,000 பேர் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளார்கள்.
இருமொழிக் கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுசீரமைப்பு, பரந்தூர் விமான நிலையம் போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் தவெக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒவ்வொரு குடும்பமும் வாழவேண்டும் என்பது நல்ல அரசியலா இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழவேண்டும் என்பது நல்ல அரசியலா?
ந்மக்கு எதிராக இவர்கள் செய்கிற செயல்கள் ஒன்றா இரண்டா? மாநாட்டில் ஆரம்பித்து இன்றைய பொதுக்குழு வரை ஏராளமான தடைகள். எல்லாத் தடைகளையும் மீறி தவெக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கும்.
மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பாகச் சொன்னால் மட்டும் பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காண்பிக்க வேண்டும்.
பாஜக ஆட்சியை ஃபாசிசஸ ஆட்சி என்று விமர்சிக்கும் நீங்கள் மட்டும் எப்படிப்பட்ட ஆட்சியை நடத்துகிறீர்கள்? எனக்குத் தடை போட நீங்கள் யார்?
நேற்று வந்தவர்கள் எல்லாம் முதல்வர் ஆக விருப்பப்டுகிறார்கள், அது நடக்கவே நடக்காது என்று சொல்கிறீர்கள். பிறகு ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தவெகவுக்குத் தருகிறீர்கள்?
அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. மீறித் தடுக்க நினைத்தால் சாதாரணமாக உள்ள காற்று சூறாவளியாகவோ சக்திமிக்க புயலாகவோ மாறும்.
இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். நம்முடைய தோழர்கள் தினமும் மக்களை நேரில் சந்திக்க வேண்டும்.
பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என்று சொல்கிறோம் என்று வேறு சொல்கிறீர்கள். உங்கள் கொடுமைகளை அனுபவிக்கும் என் சகோதரிகளான தமிழ்நாட்டுப் பெண்கள் தான் உங்கள் அரசியலுக்கும் ஆட்சிக்கும் முடிவு கட்டப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்து வரும் எல்லாப் போராட்டங்களுக்கும் தவெக துணை நிற்கும்.
மாண்புமிகு திரு மோடிஜி அவர்களே... உங்கள் பெயர்களை எல்லாம் சொல்ல எனக்குப் பயம் என்று கூறுகிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்கிறவர்கள் என்று சொல்கிறோம். இவர்களைத் தவிர வேறு யார் ஆள்கிறார்கள்?
ஏன் ஜி தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே அலர்ஜி? தமிழ்நாட்டிலிருந்து வரும் ஜிஎஸ்டியை வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை.
தமிழ்நாட்டைக் கவனமாகக் கையாளுங்கள். தமிழ்நாடு பலருக்குத் தண்ணி காண்பித்த மாநிலம். பார்த்துச் செய்யுங்கள்.
நம் ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று பேசினார்.