தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படவுள்ளன. வேட்புமனுவைத் திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாள்.