
கணக்குத் தணிக்கை மேற்கொள்ளும் வகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை போதிய ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என இந்திய கணக்குத் தணிக்கை துறை அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் இந்திய கணக்கு தணிக்கை துறையைச் (சிஏஜி) சேர்ந்த அதிகாரிகள் நேற்று (டிச.11) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் 31 மார்ச் 2023-ல் நிறைவடைந்த கடந்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் மாநில நிதி தணிக்கை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தரவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரிக்கப்பட்டன.
தணிக்கையில் ஈடுபடுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வரவு-செலவு உள்ளிட்ட நிதி தொடர்பான தரவுகளை துறை அதிகாரிகள் அளிக்க மறுப்பு தெரிவிப்பதாக, இந்திய கணக்கு தணிக்கை துறையின் முதன்மை கணக்காளர் கே.பி. ஆனந்த் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறை வசம் ஏராளமான சொத்துகள் உள்ளதாகவும், பிற மாநிலங்களில் இத்தகைய தணிக்கையில் கணக்குத் தணிக்கை துறை ஈடுபட்டு வருவதால், தமிழகத்திலும் அவ்வாறு மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார் முதன்மை கணக்காளர் ஆனந்த்.
மேலும், முறையான தணிக்கை நடைபெறாததால் வருவாய் இழப்பு ஏற்படுவதை கண்டறிய முடிவதில்லை எனவும், கோயில் சொத்துகளில் இருந்து குத்தகை தொகைகள் முறையாக வசூல் செய்யப்படும் நிலை குறித்த தகவல்கள் கிடைப்பதில்லை எனவும் கருத்து தெரிவித்தார் ஆனந்த்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய கணக்குத் தணிக்கை துறையால் தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மை செயலாளர் வழியாக தமிழக தலைமைச் செயலாளர் கவனத்திற்கு இருமுறை (ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2022) கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதற்கு, இந்திய கணக்கு தணிக்கை துறையின் அதிகார வரம்பிற்குள் இந்து சமய அறநிலையத்துறை இடம்பெறாது எனவும், எந்த விதமான சொத்துகளும் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை எனவும் கடந்த ஜூன் 2023-ல் பதிலளித்துள்ளது தமிழக அரசு.