வெற்றிக்கான அறிகுறி இல்லை: கோவை மாவட்ட நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

அண்ணனின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளால் எங்களால் கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்ய முடியவில்லை.
வெற்றிக்கான அறிகுறி இல்லை: கோவை மாவட்ட நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
1 min read

வெற்றிக்கான அறிகுறி இல்லை எனக் குற்றம்சாட்டி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கட்சியிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.

இன்று (நவ.22) காலை நாதக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவை பின்வருமாறு,

`நீண்ட காலமாக அதிருப்தியில் இருக்கும் ஒட்டுமொத்த வடக்கு மாவட்ட நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகுகிறோம். எந்தக் கட்சியில் இணைகிறோம் என்ற தகவலை விரைவில் தெரிவிப்போம். கட்சியை விட்டு வெளியேறுகிறோம் என்பதை முறையாக தெரிவிக்க செய்தியாளர்களை சந்திக்கிறோம்.

மாவட்டம், பகுதி, ஒன்றியம் என மேல்மட்ட பொறுப்பாளர்கள் 20 பேர் விலகுகிறோம். அண்ணன் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது. ஆனால் அவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளால் எங்களால் கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்ய முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் களத்தில் நிற்கிறோம், ஆனால் மக்களை எங்களை அந்நியமாக பார்க்கின்றனர்.

எங்கள் உறவினர்கள், குடும்பத்தினர் பாரம்பரியமாக திமுக அதிமுகவில் இருக்கின்றனர். இது மாற்றத்திற்கான கட்சி என்பதை நம்பி நாங்கள் களத்திற்கு வந்தோம். ஆனால் மாற்றம் இல்லை என்றபோது வெளியேறும் சூழல் ஏற்பட்டுவிட்டது. அருந்ததியர் சமூகத்தினர் குறித்த சீமானின் பேச்சு களத்தில் எங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

சமூகத்திற்கு அருந்ததியர்கள் பங்களித்துள்ளனர். அவர்களை வந்தேறிகள் என பேசும்போது அது பிரச்னையை ஏற்படுத்துகிறது. வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வருவார் என்று நம்பி நாங்கள் களத்திற்கு வந்தோம். ஆனால் அதை நோக்கிய பயணம் தற்போது இல்லை என்பதால்தான் நாங்கள் வெளியேறுகிறோம்.

முன்பு இருந்த ராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள் நாங்கள் பிரச்னைகளைக் கூறியபோது அதை சரி செய்தனர். ஆனால் இப்போது இருப்பவர்களிடம் பிரச்னையைக் கூறினால் பொறுமையாக இருங்கள் எனக் கூறுகின்றனர். எங்களால் எதுவுமே செய்யமுடியவில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in