
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு நிற எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அனைத்து எச்சரிக்கைகளுக்கும் மாறாக அனைவரும் எதிர்பார்த்த அதிகனமழை நேற்றிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்யவில்லை. இதைத் தொடர்ந்து, இன்று காலை 7 மணி நிலவரப்படி இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், பிற்பகலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டு, சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
"காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் கரையைக் கடக்கவில்லை, கடலில் தான் உள்ளது என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து இடங்களிலும் 20 செ.மீ. அளவுக்கு மேல் பெரிய அளவில் மழை இருக்கும் என்று அர்த்தமில்லை. முழு காற்றழுத்தத் தாழ்வு வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வருகிறது. காலைப் பொழுது பகல் பொழுதுக்கு இடையே வேறுபாடு இருக்கக்கூடிய சூழலில் நாளை காலை கரைக்கு அருகில் வருகின்றபோது மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால், ஏற்கெனவே பெய்த மழை மற்றும் அதன் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு நிற எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இரவு 8.30 மணி நிலவரப்படி இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.