தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்புடையவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்த வருவாய்த் துறை அதிகாரி கண்ணன் என்பவர் உத்தரவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கண்ணன் உள்பட பலர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 6 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய கண்ணன் என்பவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய கண்ணன் என்பவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.
"தூத்துக்குடியில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 6.9.24 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த் துறை அலுவலராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு. கண்ணன் என்பவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து. கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு அளிக்கப்பட்ட து. கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.