சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் புதனன்று (ஆக. 28) ஒருவர்கூட காரோ ஸ்கூட்டியோ பயன்படுத்தாமல் பொதுப்போக்குவரத்தின் வழியாகக் கல்லூரிக்கு வருகை தந்து அசத்தியுள்ளார்கள்.
இந்தச் செய்தியைக் கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!
எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்வதில் கவனம் பெற்றது. கல்லூரி வளாகத்தில் சூரிய மின் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. விருந்தினர்களுக்குப் பூங்கொத்து வழங்குவதற்குப் பதில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக மரம் நடப்படுகிறது.
இவற்றின் தொடர்ச்சியாக புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி. மாதம் ஒருமுறை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட அனைவரும் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தாமல் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து வரலாம், சைக்கிளில் வரலாம், மின்னணு வாகனம், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாமே தவிர கார், ஸ்கூட்டி, பைக் போன்ற காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்களைக் கல்லூரிக்குக் கொண்டு வர அனுமதி கிடையாது. காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு 3 கி.மீ. தூரம் நடந்து வந்த முதல்வர் அர்ச்சனா பிரசாத், "கல்லூரிக்கு வரும் விருந்தினர்களையும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்" என்றார். இந்தளவுக்கு எடுத்த முடிவில் உறுதியாக இருந்து கடைபிடித்துள்ளார்கள். இதற்கு மாணவிகளிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த முயற்சியால் எப்போதும் நெரிசலாகக் காணப்படும் கல்லூரி வளாகத்தில் நேற்று ஒரு வாகனம்கூட கண்ணில் தென்படவில்லை. நிறைய மாணவிகள் பொதுப் போக்குவரத்து விவரங்கள் குறித்து கேட்டறிந்து பயணிப்பதால், அவர்களுக்கும் ஒரு புதுமையான அனுபவம் கிடைப்பதாக கல்லூரி மாணவிகள் தெரிவிக்கிறார்கள்.
(இணைப்பு - வீடியோ)